சித்திரை மாசம் தமிழ் வருஷப் பிறப்பு அன்று செய்வது.
மாங்காய்ப் பச்சடி - வேப்பம்பூப் பச்சடி என்றும் சொல்லலாம்.
பச்சை மாங்காய் – 1 நல்ல நெத்து மாங்காயாக பார்த்து வாங்க வேண்டும்.
தேங்காய் – கால் மூடி அளவுக்கு
பாகு வெல்லம் – அரை உருண்டை அளவுக்கு உடைத்துக் கொள்ளவும்
புளி – ஆள் காட்டி விரல் நீளம் உள்ள அளவுக்கு - ஊற வைத்துக் கொள்ளவும்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் - ஒரு மணிநேரம் ஊறியது
ஏலப்பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
மிளகாய் பொடி – 1 சிட்டிகை
வேப்பம்பூ - இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு
* தேங்காயை சின்னச் சின்னதாக (பேல்பூரி சாட் அல்லது சுண்டலுக்கு போடுவது போல நறுக்கிக் கொள்ளவும்.
* மாங்காயை தோல் சீவி விட்டு தொக்குக்கு (ஊறுகாய்) துருவுவது போல துருவியோ / மிக்சியில் ஒரு சுற்று அரைத்து தூளாக்கியது போலவோ செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பாகு வெல்லத்தை சீவிக் கொண்டு, ஏலம் சேர்த்து, ஒரு பால் கரண்டி அளவு தண்ணீரில் கரைத்து அடி கனமான வாணலியில் அரைப் பாகாக காய்ச்சிக் கொள்ளவும். பாகை ஸ்பூனால் ஊற்றினால் ஊற்ற வரவேண்டும். வாணலி சூட்டிலேயே இன்னும் கொஞ்சம் கெட்டியாகி விடும் என்பதால் இந்தப் பதத்திலேயே அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
* வேறு வாணலியில் (இன்டாலியம் அல்லது இரும்பு) சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வேப்பம் பூவை கசப்பு வாசனை வரும் வரை வறுங்கள். வேப்பம் பூ நன்றாக வறுபடும் போது நமக்கு தொண்டையில் ஒரு கசப்பு ஏற்படும். இதை அப்படியே வெல்லத்தில் போடுங்கள்.
* இந்த வாணலியிலேயே, ஒரு முறை அலம்பி விட்டு, இரண்டு பால் கரண்டி தண்ணீர் விட்டு கடலை பருப்பை வேக விட்டுக் கொள்ளவும். கடலைப் பருப்பு முக்கால்வாசி வெந்ததும் மாங்காய் தேங்காயை போட்டு நீர் வற்றும் வரை, கருகாமல் பார்த்து வதக்கவும்.
* தண்ணீர் சுண்டியதும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு, உப்பு, மிளகாய்ப் பொடி, வேப்பம் பூ எல்லாவற்றையும் போட்டு ஒரு தரம் திருப்பி விட்டு வாணலியை இறக்கி விடவும்.
* வெல்லப் பாகை லேசாக சூடு பண்ணிக் கொண்டு, பாகில் மாங்காய் தேங்காய் வேப்பம்பூ கலவையை சேர்த்தும், இரண்டு நிமிடம் கொத்திக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். கனமான வாணலி என்பதால் பாத்திர சூட்டிலேயே இறுகிக் கொள்ளும். அதனால் வெகு நேரம் வெல்லத்தை கிளறிக் கொண்டிருக்க வேண்டாம்.
* கொஞ்சம் ஆறினதும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு திருப்பினால், நெய்யிலேயே செய்தா மாதிரி இருக்கும்.
No comments:
Post a Comment